திமுக ஆட்சிதான் சிறுபான்மையினரின் பொற்கால ஆட்சி என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் அமைதியை எப்படி சீர்குலைக்கலாம் என பலர் யோசிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் பாளைங்கோட்டையில் நேற்றிரவு கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
அன்பு நெறியை, பண்பு நெறியாக வளர்த்தெடுப்பதுதான் கொண்டாட்டங்களின் அடிப்படை. வெறுப்புணர்வு என்பது பாவங்களை செய்யத் தூண்டும். அன்பு என்பது அத்தனை பாவங்களையும் போக்கும்.
அப்படிப்பட்ட அமைதியான, அன்பான, சகோதரத்துவ உணர்வுமிக்க சமுதாயத்தை கட்டமைக்கும் கடமை நமக்குள்ளது. இதுதான் இன்றைய இந்தியாவுக்கு தேவை.
இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்துவர்களும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளாக வாழ வேண்டும். அதற்கு கிறிஸ்துமஸ் போன்ற விழாக்கள் துணை நிற்க வேண்டும். மதச் சார்பின்மை, மத நல்லிணக்கத்தை விரும்பும் நாங்கள், சிறுபான்iயினருக்கு அரணாக என்றும் இருப்போம்.
திமுக என்பது சிறுபான்மையினர்; நலனில் உண்மையான அக்கறை கொண்டுள்ள இயக்கம். திமுக ஆட்சிதான் சிறுபான்மையினரின் பொற்கால ஆட்சி. சிறுபான்மையினருக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
சிறுபான்மையினரின் கல்வி நிலையங்களின் ஆசிரியர் தேர்வு கமிட்டியில் அந்தந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் மட்டுமே இருப்பர் என்ற அரசாணையில் கையெழுத்து போட்டுவிட்டுதான் இங்கே வந்திருக்கிறேன்.
ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூர் கிராமத்தில் உள்ள தொன்மையான புனித யாக்கோபு சர்ச் 1.40 கோடி ரூபாயில் சீரமைக்கப்படும்.
புதிய விதிகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே நியமிக்கப்பட்ட 470 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படும்.
எந்த மத பாகுபாடும் இல்லாமல் கோரிக்கைகளை நிறைவேற்றுகிறோம். திருப்பணி செய்கிறோம். இதற்கு தமிழக மக்கள் பக்கபலமாக உள்ளனர். இது சிலரின் கண்களை உறுத்துகிறது.
தமிழகத்தின் அமைதியை எப்படி சீர்குலைக்கலாம். ஒன்றாக பழகும் மக்களை எப்படி எதிரிகளாக பிரிக்கலாம் என்று பலர் யோசிக்கின்றனர். ஆன்மிகத்தின் பெயரில் சில அமைப்புகளை அழைத்துச் செல்லும் வழி வன்முறைக்கான பாதை என்பதை தமிழகம் உணர்ந்துள்ளது.
மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டுபவர்களை சந்தேகப்படுங்கள். கவனமாக இருங்கள் என்ற பைபிள் வாசகத்தை குறிப்பிட விரும்புகிறேன்.
மத்திய பா.ஜ., அரசுக்கு மதச்சார்பின்மை என்ற சொல்லே வேப்பங்காயாக கசக்கிறது. தமிழகத்திலும் தனது திட்டத்தை செயல்படுத்த நினைக்கிறது. எப்படிப்பட்ட ஆபத்தையும், பா.ஜ.வின் நாசக்கார திட்டத்தையும் எதிர்த்து, முறியடிக்கும் வலிமை தமிழகத்திற்கும் திமுகவுக்கும் உண்டு என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Comments are closed.