ஆர்டர்லி விவகாரம்: தலைமைச் செயலர், உள்துறைச் செயலர் வழக்கில் சேர்ப்பு

ஆர்டர்லி விவகாரத்தில் டிஜிபி தாக்கல் செய்த அறிக்கைக்கு அதிருப்தி தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், உண்மை நிலையை அறிய தலைமைச் செயலர், உள்துறைச் செயலர் ஆகியோரை தாமாக முன்வந்து எதிர்மனுதாரர்களாகச் சேர்த்துள்ளது.

காவல் துறையில் ஆர்டர்லி முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2022ஆம் ஆண்டு உத்தரவிட்டது. அவ்வுத்தரவை அதிகாரிகள் முழுமையாக அமல்படுத்தவில்லை என நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு குற்றஞ்சாட்டியிருந்தது.

இவ்வழக்கு விசாரணையின்போது, தமிழகத்தில் ஒருவர்கூட ஆர்டர்லியாக இல்லை என டிஜிபி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஒருவேளை யாரேனும் ஆர்டர்லி பணியில் இருப்பதாகப் புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அரசின் தலைமை குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகம்மது ஜின்னா தெரிவித்திருந்தார்.

இவ்வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, டிஜிபி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தமிழகத்தில் ஆர்டர்லி முறை இல்லை எனக் கூறுவது நம்பும்படியாக இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். அதற்கு, ஆர்டர்லி முறை இருப்பதாக ஆதாரத்துடன் புகார் அளித்தால், அது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ஆர்டர்லி முறை தற்போது இல்லை என அரசு கூறுகிறது. ஆனால், கடந்த 17ஆம் தேதி 1,03,000 காவலர்களில் 5,000 பேர் ஆர்டர்லியாக அதிகாரிகளின் வீடுகளில் வேலை செய்வதாக நாளிதழில் செய்தி வந்துள்ளது. குறிப்பாக, ஓய்வுபெற்ற டிஐஜி முதல் டிஜிபிக்களின் வீடுகளில் 800 காவலர்கள் ஆர்டர்லிகளாக இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. பொதுவெளியில் இது தொடர்பாக பல புகார்கள் வருகின்றன. சீருடை அணிந்த காவலர்கள் இத் தேசத்தின் பாதுகாப்புக்காக மட்டுமே பணியாற்ற வேண்டும். அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லிகளாக வேலை செய்யக் கூடாது எனக் கூறிய நீதிபதிகள், இவ்வழக்கில் உண்மை நிலையை அறிய, தலைமைச் செயலர், உள்துறைச் செயலர் ஆகியோரை தாமாக முன்வந்து எதிர்மனுதாரர்களாகச் சேர்த்து உத்தரவிட்டனர்.

Comments are closed.