காந்தியின் பெயரை காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை, மாநில அரசின் மீது சுமை கூடுவதை கவனிக்க வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்டத்துக்கு மாற்றான வளர்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்ட மசோதா மக்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 2 நாள்களாக விவாதம் நடைபெற்று வந்த நிலையில், இன்று மசோதா நிறைவேற்றப்பட உள்ளது.
இந்நிலையில், இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன், காந்தியின் பெயரை காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறினார்.
“நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், தமிழக அரசின் மீது சுமை கூடுகிறது. ஏழைகளுக்குச் சேரவேண்டிய நிதியுதவி, நலத்திட்டங்கள் குறைகின்றன. அவற்றை மீட்கவும், காக்கவும்தான் முயற்சி செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு, வேறு இடத்தில் விளையாடக்கூடாது என்பது தான் எனது தாழ்மையான கருத்து” என்றார் கமல்ஹாசன்.
மேலும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக கண்டிப்பாக பிரசாரம் செய்வேன் எனவும் கமல் தெரிவித்தார்.

Comments are closed.