அண்ணா பல்கலை. வழக்கு: ஞானசேகரன் மீதான குண்டர் சட்டம் ரத்து!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், ஞானசேகரன் குண்டர்சட்டத்தில் அடைக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து, அவர் மாநகர காவல் ஆணையரின் உத்தரவின்பேரில் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

இவ்வுத்தரவை ரத்து செய்யக் கோரி ஞானசேகரனின் தாய், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனிடையே, அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஞானசேகரன் மீதான குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கு அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் அடிப்படையில்தான் ஞானசேகரன் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார் எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், தற்போது அவ் வழக்கில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அவரைக் குண்டர் சட்டத்தில் அடைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுவதாக உத்தரவிட்டனர்.

Comments are closed.