எதிர்வரும் தமிழகம் மற்றும் மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) அமோக வெற்றிபெறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அகமதாபாத் மாநகராட்சி சார்பில் ரூ.1500 கோடி மதிப்பிலான மூன்று விளையாட்டு வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டிய பின் நடைபெற்ற அமித் ஷா பேசியதாவது:
2024 மக்களவைத் தேர்தலில் நமது தலைவர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராகி சாதனை படைத்துள்ளார். மகாராஷ்டிரம், ஹரியாணா, டில்லியைத் தொடர்ந்து, தற்போது பிகாரில் நடைபெற்ற பேரவைத் தேர்தல்களிலும் காங்கிரஸ் துடைத்தெறியப்பட்டது. அதேநேரம், 2014 முதல் 2025வரை பாஜகவுக்குத் தொடர்ந்து வெற்றிக் காலமே.
பிகாரில் என்டிஏ கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தபோதிலும், வாக்காளர் பட்டியல் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குறைகூறுகிறார். உண்மை என்னவெனில், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்துவிட்டனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோருக்கு இத்தருணத்தில் ஒரு செய்தியைச் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் தயாராக இருங்கள். பிகாரைத் தொடர்ந்து, தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்திலும் என்டிஏ கூட்டணிதான் வெற்றிபெறும். தேர்தல் முடிவுகளில் தமிழகத்தில் திமுகவும், மேற்கு வந்கத்தில் திரணமூல் காங்கிரசும் துடைத்தெறியப்படும் என்றார் அமித் ஷா.

Comments are closed.