குழந்தைகளின் விருப்பம், உணர்வுகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த தம்பதி தங்களுக்கு விவாகரத்து கோரி தாக்கல் செய்த வழக்கு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விசாரணையில் உளளது. இந்நிலையில், இத் தம்பதிக்கு பிறந்த இரட்டை ஆண் குழந்தைகள் யாரிடம் இருப்பது என்பது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இவ் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை குழந்தைகள் தாயுடனும், சனி மற்றம் ஞாயிற்றுக்கிழமைகளில் தந்தையிடமும் இருக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இவ்வுத்தரவை எதிர்த்து குழந்தைகளின் தந்தை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இம் மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது குழந்தைகள் இருவரையும் தனித்தனியாக அழைத்து நீதிபதிகள் விசாரித்தனர். அக் குழந்தைகள் இருவரும் தாயிடம் செல்ல விரும்புவதாகவும், தங்களது தந்தை மற்றும் பாட்டி தங்களை அடித்து துன்புறுத்துவதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், இனியும் குழந்தைகள் தந்தையுடன் இரண்டு நாள்கள் இருக்க வேண்டும் என்ற உத்தரவிட்டால், அவர்கள் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளால் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்படுவார்கள். குழந்தைகளும் தாயுடன் வாழவே விரும்புகின்றனர். இவ்வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. குழந்தைகள் தாயுடன் செல்ல அனுமதிக்கிறோம் என உத்தரவிட்டனர்.
மேலும், பெற்றோருக்கு இடையிலான பிரச்சினைகளில் குழந்தைகளைப் பண்டங்களைப் போல பரிமாற்றம் செய்யக் கூடாது. குழந்தைகள் யாருடன் வாழ வேண்டும் என்பது குறித்த வழக்குகளின்போது, குழந்தைகளின் உணர்வுகள், மனநிலையை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். உலகளாவிய குழந்தைகள் தொடர்பான கருத்துகளின் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டும்.
குழந்தைகள் இம் மகத்தான தேசத்தின் முதுகெலும்பு ஆவர். எனவே குழந்தைகளின் விருப்பம், உணர்வுகளுக்கு முனனுரிமை வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Comments are closed.