திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற முயற்சித்தபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளு தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக இந்து அமைப்பினர் 13 பேரைக் கைது செய்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு பதிலாக, மலை உச்சியில் அமைந்துள்ள தீபத் தூணில் ஏற்ற உத்தரவிட வேண்டும் என ராம.ரவிக்குமார் தொடர்ந்நத வழக்கில், மலை உச்சியில் தீபத்தை ஏற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
அதன்படி, அதற்கான முன்னேற்பாடுகள் நேற்று பிற்பகலில் நடைபெற்றன. தீபம் ஏற்றுவதற்கு தேவையான மண் பானை, நெய், திரி, சூடம் போன்றவை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டன. ஆனால், மாலை 4 மணியளவில் தீபம் ஏற்றும் பொருள்கள் அனைத்தும் கீழே இறக்கப்பட்டன.
முhலை 6.05 மணியளவில் மலை மீதுள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபத்தில் மட்டும் கோயில் நிர்வாகம் சார்பில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
இதையடுத்து, இந்து அமைப்பினர் மலைப்பாதை அருகே திரண்டு, போலீஸார் அமைத்திருந்த தடுப்புகளை கீழே தள்ளிவிட்டு, மலை மீது ஏற முயன்றனர். அப்போது இந்து அமைப்பினர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், இரு காவலர்கள், பாஜக மாவட்டத் தலைவர் சிவலிங்கம், நிர்வாகி ராக்கப்பன் ஆகியோர் காயமடைந்தனர்.
இச் சம்பவம் தொடர்பாக 15 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 13 பேரைக் கைது செய்துள்ளனர்.

Comments are closed.