கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் கண்டறிந்து தெரிவிப்பு: போலி டாக்டர் கைது!

தமிழகம் முழுவதும் நடமாடும் ஸ்கேன் பரிசோதனை மையம் நடத்தி கர்ப்பிணிகளின் கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? எனத் தெரிவித்த போலி மருத்துவர் மற்றும் 2 பெண் இடைத்தரகர்களை மருத்துவக் குழுவினர் பிடித்து வாழப்பாடி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளுரில் ஒரு குழு முகாமிட்டு கருவுற்ற பெண்களில் கருவில் இருக்கும் கருவின் பாலினம் குறித்து தெரிவித்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், சேலம் ஊரக மருத்துவ இணை இயக்குநர் நந்தினி தலைமையில் மருத்துவக் குழுவினர் இன்று அதிகாலை பேளுரில் முகாமிட்டனர்.
அப்போது, பேளுர் தனியார் திருமண மண்டபம் பின்புறம் உள்ள மாரியம்மாள் என்பவரது வீட்டிற்கு காரில் ஸ்கேன் கருவியைக் கொண்டுவந்த வெங்கடேஷ் என்பவர் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கருவுற்றிருந்த பெண் ஒருவருக்கு ஸ்கேன் செய்து கருவில் இருக்கும் குழந்தை பாலினம் குறித்து தெரிவித்துள்ளார்.

 

அப்போது வீட்டிற்குள் புகுந்த மருத்துவக் குழுவினர் வெங்கடேஷை கையும் களவுமாகப் பிடித்து, அவருக்கு இடைத்தரகராக செயல்பட்ட விலாரிபாளையத்தைச் சேர்ந்த லதா, வீடு வாடகைக்கு கொடுத்த பேளுர் சக்திவேல் மனைவி மாரியம்மாள் ஆகிய மூவரையும் பிடித்து, வாழப்பாடி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

தமிழகம் முழுவதும் நடமாடும் ஸ்கேன் பரிசோதனை மையம் நடத்தி குற்றச்செயலில் ஈடுபட்டு வந்த வெங்கடேஷ் 12ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு போலி மருத்துவராக வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Comments are closed.