Your message has been sent
தமிழகத்தின் பல மாவட்டகளிலும் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், சாலைகளில் தேங்கியிருக்கும் நீரிலிருந்து எலிக்காய்ச்சல் (Leptospirosis) மற்றும் மெலிடோயோடோசிஸ் (Meliodosis) தொற்றுகள் பரவ ஏற்பட வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதனால், மழைநீரில் வெறுங்கால்களில் நடக்க வேண்டாம் என சுகாதாரத்துறையினர் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.
எலிக்காய்ச்சல் என்பது சுழல் வடிவ நுண்ணுயிரியான லெப்டோஸ்பைரோசிஸ் எனப்படும் பாக்டீரியாவில் இருந்து விலங்குகளுக்கு பரவி அதன் வாயிலாக மனதர்களிடம் தொற்றிக் கொள்ளும் நோய் ஆகும்.
இது சிறுநீரகம் மற்றும் நுரையீரலில் பாதிப்பு ஏற்படுத்துகிறது. நாய்கள், பன்றிகள், கால்நடைகளின் மூலம் இந்நோய் பரவுகிறது. தொற்றுநோய் உள்ள உயிரினங்களின் கழிவுகள் மழைநீரில் கலந்திருக்கக்கூடும். அதில் கால் வைத்தால் நமது உடலிலும் தொற்று ஊடுருவ வாய்ப்புள்ளது.
அதேபோல, மெலியோடோசிஸ் எனப்படும் பாக்டீரியா தொற்றும் மழைக் காலத்தில் பரவுகிறது. மண்ணுக்குள் இருக்கும் பர்கோல்டேரியா சூடோமல்லே எனப்படும் கிராம்-எதிர்மறை பாக்டீரியாவால் ஏற்படும் தொற்று நோய் ஆகும்.
அசுத்தமான மண் அல்லது தண்ணீருடன் தொடர்பு கொள்வதன் மூலம் பி.சூடோமல்லே பரவுகிறது.
ஒருவரது உடலில் பாக்டீரியா கிருமி ஊடுருவிய இரண்டாவது வாரத்தில் இருந்து அதன் அறிகுறிகள் தென்படும். தீவிர காய்ச்சல், குளர் நடுக்கம், தலைவலி, இருமல், மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்டவை அதன் முக்கிய அறிகுறிகள்.
முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிடில் சிறுநீரகம், கல்லீர்ல், நுரையீரல், எலும்புகள், மூளை போன்ற முக்கிய உறுப்புகள் பாதிப்புக்குள்ளாகும்.
எதிர்ப்பாற்றல் குறைந்தவர்கள், கட்டுப்பாடற்ற சர்க்கரை நோயாளிகள், கல்லீரல், சிறுநீரக பாதிப்புக்குள்ளானவர்கள், தலசீமியா நோயாளிகள், புற்று நோயாளிகள், எச்ஐவி நோயாளிகள், நுரையீரல் பாதிப்பு இருப்பவர்களுக்கு லெப்டோஸ்பைரோசிஸ் மற்றும் மெலியோடோசிஸ் தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே, இதுகுறித்து பொதுமக்கள் விழிப்புடணர்வுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.