ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 17 பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து!

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 17 பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், 2024ஆம் ஆண்டு ஜுலை 5ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இவர்களில் 26 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டதற்கும் குண்டர் தடுப்புச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட காலத்திற்கும் இடையேயான கால தாமதத்தை சுட்டிக்காட்டி, தங்கள் மீதான குண்டர் தடுப்புச் சட்;டத்தை ரத்து செய்யக்கோரி நாகேந்திரன் உள்ளிட்ட 17 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தனர்.

இவ்வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் லட்சுமி நாராயணம் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பு வாதங்களை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், 17 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய உத்தரவிட்டனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இயந்திரத்தனமாக குண்டர் சட்டம் பிறப்பிக்கபட்டுள்ளதாகக் கூறிய நீதிபதிகள், குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்ட காரணத்தினால் இவர்களுக்கு ஜாமீன் வழங்கிவிடக் கூடாது என்றும், வழக்கின் தீவிரத்தை முழுமையாகக் கருத்தில் கொண்டே ஜாமீன் மனுக்கள் மீது முடிவெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

Comments are closed.