மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளை சுட்டுப் பிடித்த போலீஸார்!

தனியார் கல்லூரி மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த மூவரை போலீஸார் நள்ளிரவு சுட்டுப் பிடித்தனர்.

கோவையில் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்துவரும் மதுரையைச் சேர்ந்த 20 வயது மாணவியும், கோவையைச் சேர்ந்த அவரது நண்பரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் கோவை விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகர் பகுதியில் உள்ள காலி மைதானத்தில் காரில் அமர்;ந்தவாறு பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு போதையில் வந்த மூவர், கார் கதவை தட்டி வெளியே வருமாறு அழைத்தனர். அச்சமடைந்த இருவரும் வெளியே வர மறுத்தனர். இதையடுத்து, அம் மூவரில் ஒருவர் கார் முன்பக்க கண்ணாடியை அரிவாளால் அடித்து உடைத்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, காரின் கதவு கண்ணாடியை உடைத்துள்ளனர். பின்னர், காரில் இருந்த இளைஞரை கடுமையாகத் தாக்கி அரிவாளால் வெட்டினர். அதில் அவருக்கு தலை மற்றும் காதின் அருகே காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

இதையடுத்து, அம் மூவரும் அம் மாணவியை ஒன்னரை கி.மீ. தூரம் இழுத்துச் சென்று, மறைவான இடத்தில் வைத்து கூட்டுப் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அம் மாணவி மூர்ச்சையானார். எனவே அம்மூவரும் நள்ளிரவில் அம் மாணவியை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர்.

மயக்கமடைந்த இளைஞருக்கு அதிகாலை 3 மணியளவில் நினைவு திரும்பியது. அவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து நடந்த விபரத்தைக் கூறினார். அதன்பேரில், போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து, அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவ்விளைஞர் அளித்த தகவலின் அடிப்படையில் அம் மாணவியை போலீஸார் தேடினர். இரண்டு மணிநேர தேடலுக்குப் பின், கார் நின்றிருந்த இடத்தில் இருந்து சுமார் ஒன்னரை கி;.மீ.க்கு அப்பால், அம் மாணவி உடையின்றி மயங்கி கிடந்தார். அவரை போலீஸார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இப்படுபாதக செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் பிடிக்க கோவை மாநர காவல்துறை வடக்கு துணை ஆணையர் தேவநாதன் தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய குணா தவசி, சதீஷ் கருப்பசாமி, கார்த்திக் காளீஸ்வரன் ஆகிய மூவரையும் துடியலூர் பகுதியில் போலீஸார் சுட்டுப் பிடித்தனர். இதில் காயமடைந்த அம் மூவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Comments are closed.