கோவை விமான நிலையம் அருகே நேற்றிரவு தனது ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த தனியார் கல்லூரி மாணவியை மூன்று பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
கோவை சித்ரா பகுதியில் சர்வதேச விமான நிலையம் பின்புறம் உள்ள காலியிடத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் தனியார் கல்லூரியில் முதுநிலை முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர் அவரது ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அவ் வழியாக வந்த அடையாளம் தெரியாத 3 பேர், காரின் கண்ணாடியை உடைத்து, ஆண் நண்பரைத் தாக்கி மயக்கமடையச் செய்துவிட்டு, அம் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
மயக்க நிலையில் இருந்த ஆண் நண்பர் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த பீளமேடு காவல்துறையினர் பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது நண்பரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதைத் தொடர்ந்து, அடையாளம் தெரியாத அம் மூன்று நபர்கள் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, 7 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.

Comments are closed.