தோழியின் வீட்டில் செல்போன் திருடிய பெண் டிஎஸ்பி!

தோழியின் வீட்டில் ரூ.2 லட்சம் பணம் மற்றும் விலையுயர்ந்த செல்போன் ஆகியவற்றை பெண் டிஎஸ்பி ஒருவரே திருடியுள்ள சம்பவம் காவல்துறையினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் ஜஹாங்கிராபாத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் பணிபுரியும் கல்பனா ரகுவன்ஷி (56) என்பவரும் போபாலில் வசிக்கும் அவரது தோழியான பிரமிளா திவாரியும் நீண்ட கால நண்பர்கள்.

இந்நிலையில், பிரமிளா கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி தனது மொபைல் போனை சார்ஜில் போட்டு விட் குளிக்கச் சென்றுவிட்டார். அப்போது, அவரது வீட்டிற்குள் நுழைந்த டிஎஸ்பி கல்பனா, பிரமிளாவின் கைப் பையில் வைத்திருந்த செல்போனையும், ரூ.2 லட்சம் ரொக்கப் பணத்தையும் திருடிவிட்டு ஒன்றுமே நடக்காதது போல அங்கிருந்து நடையைக் கட்டிவிட்டார்.

குளித்துவிட்டு வந்த பிரமிளா தனது கைப் பையில் வைக்கப்பட்டிருந்த மொபைல் போன் மற்றும் பணம் ஆகியவை திடீரென காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, அவர் தனது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தபோது, தனது மொபைலையும் பணத்தையும் திருடிச் சென்றது அவரது தோழியான பெண் டிஎஸ்பி கல்பனா ரகுவன்ஷி என்பது தெரிந்து மேலும் அதிர்ச்சியடைந்தார்.

இச் சமப்வம் குறித்து, பிரமிளா காவல்துறையில் புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள டிஎஸ்பி கல்பனாவை தேடி வருகின்றனர். டிஎஸ்பி கல்பனாவை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அடிஷனல் எஸ்பி பிட்டு ஷர்மா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, தலைமறைவாக உள்ள  டிஎஸ்பி கல்பனாவின் வீட்டில் இருந்து  பிரமிளாவின் மொபைல் போனை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

Comments are closed.