பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

தமிழ்நாட்டில் வேலை செய்யும் பிகார் மக்கள் துன்புறுத்தப்படுவதாக பிரதமர் நரேந்திரமோடி பேசியுள்ளதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், இந் நாட்டிலுள்ள அனைவருக்குமான பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே மோடி அடிக்கடி மறந்து இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

“ஒடிசா-பிகார் என எங்கு சென்றாலும், பாஜகவினர் தமிழர்களின் மீதான வன்மத்தைத் தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துவதற்கு தமிழ்நாட்டு மக்களின் முதலமைச்சர் என்ற முறையில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பன்முகத்தன்மை கொண்ட வேற்றுமையில் ஒற்றுமையைக் காணும் பெருமைமிக்க இந்தியாவில், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பகையை வளர்ப்பது, தமிழர்களுக்கும் பிகார் மக்களுக்கும் பகை உண்டாக்கும்படி நடந்து கொள்வது போன்ற அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு, நாட்டின் நலன் மீது பிரதமரும் பாஜகவினரும் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

Comments are closed.