வெறுப்பு அரசியலை வெளிப்படுத்தும் ஸ்டாலின்: எல்.முருகன் குற்றச்சாட்டு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெறுப்பு அரசியலை வெளிப்படுத்துவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மாமல்லபுரத்தில் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசு மீதும், பாஜக அரசு மீதும் வழக்கம்போல வன்மத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஜிஎஸ்டி, தேசிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு என மத்திய அரசு தொல்லை கொடுப்பதாக வெறுப்பு அரசியலை வெளிப்படுத்தியுள்ளார்.

வடக்கு, தெற்கு மற்றும் புது தில்லி, சென்னை என பிரிவினை வாதம் பேசுவதன் மூலம் திமுக மீது கோபத்தில் இருக்கும் தமிழக மக்களை திசை திருப்புதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கனவு காண்கிறார். அவ்வாறு அவர் பேசுவதன் மூலம் திமுகவினரிடம் வரவேற்பைப் பெறலாம். ஆனால், தமிழக மக்களிடம் வாக்குகளை அவரால் பெற முடியாது.

பிஎம்ஸ்ரீ திட்டத்தை இடதுசாரி கட்சிகள் ஆளும் கேரள அரசு கூட ஏற்று செயல்படுத்த முன்வந்துள்ளது. ஆனால் தமிழக முதல்வரின் எதிரான நடவடிக்கையால் தமிழக மக்களின் நலன் பாதிக்கப்படுகிறது.

தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது குறித்து மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் வருகிற பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சி அகற்றப்பட்டு, மக்கள் விரும்பும் நல்லாட்சி அமையும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Comments are closed.