எட்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் மற்றும் அது தெரிந்தும் நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியை ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின்கீழ் போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.
பட்டுக்கோட்டை அருகேயுள்ள எட்டுபுலிகாடு கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துவரும் மாணவி ஒருவரிடம் அப்பள்ளியில் பணியாற்றிவரும் பாஸ்கர் (53) என்ற ஆசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அம் மாணவி இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் சனிக்கிழமை காவல் நிலையத்திற்கு ஃபோன் மூலம் புகார் தெரிவித்துவிட்டு, பள்ளி முன்பு ஏனைய பிற மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினரையும் அவர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
இதையடுத்து, ஆசிரியர் பாஸ்கரனை போலீஸார் அழைத்து விசாரணை நடத்தினர். அதில், ஆசிரியர் பாஸ்கரன் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்திருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆசிரியர் பாஸ்கரனை போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.
மேலும், இச் சம்பவம் குறித்து அறிந்திருந்தும் ஆசிரியர் பாஸ்கரன் மீது நடவடிக்கை எடுக்காமல் மறைத்த தலைமை ஆசிரியர் விஜயா என்பவரையும் போலீஸார் கைது செய்தனர்.

Comments are closed.