ஆஸ்திரேலிய வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞர் கைது!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகாரின்பேரில் அகில்கான் என்பவரை மத்தியப் பிரதேசம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கோப்பைத் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இத் தொடரில், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகள் அரை இறுதிக்கு முன்னேறியுள்ளன.

இத் தொடரில் இன்று நடைபெறும் லீக் சுற்றின் 26-வது போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மத்தியப்பிரதேசம் இந்தூரில் விளையாடி வருகின்றன.

இந்நிலையில், இப்போட்டியில் பங்கேற்க இந்தூருக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய வீராங்கனைகளில் இருவர் வியாழக்கிழமை (அக்.23) ரேடிசன் புளு ஓட்டலில் இருந்து அருகிலுள்ள ஒரு பிரபலமான ஓட்டலுக்கு ‘ஜாகிங்’ சென்று கொண்டிருந்துள்ளனர்.


அப்போது, தேநீர் விடுதிக்குச் செல்ல கஜ்ரானா சாலையில் நடந்து வந்தபோது, தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்த அகில்கான் என்பவர் அவ்விரு வீராங்கனைகளிடமும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

இச்சம்பவத்தில், கண்காணிப்பு கேமராக்கள், அருகில் இருந்தவர்கள் கொடுத்த ஆதாரங்கள் அடிப்படையில் அகில் கானை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவத்தை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் தேவ்ஜித் சாய்க்கியா வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகளிடம் இந்தியர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.