பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வசிக்கும் தைலாபுரம் தோட்ட வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இன்று காலை இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. மேலும், ராமதாஸின் ஆதரவாளரான ஆடுதுறை சேர்மன் ம.க.ஸ்டாலினை கொலை செய்ய அவரது அலுவலகத்தில் வெடிகுண்டு வீசப்பட்டது.
இதனால், ராமதாஸிற்கு துப்பாக்கி ஏந்திய கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், தைலாபுரம் இல்லத்திற்கு மெட்டல் டிடெக்டர் வசதியுடன் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் எனவும் டிஜிபி அலுவலகத்தில் பாமக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இன்று காலை இ-மெயில் மூலம் தகவல் வந்தது.
இதைத் தொடர்ந்து, விழுப்புரத்தில் இருந்து சிறப்பு பாதுகாப்பு படையினர் தைலாபுரம் வீட்டிற்கு விரைந்து சென்று, மெட்டல் டிடெக்ர் கருவி மற்றும் மோப்ப நாய் உதவியுடன், தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

Comments are closed.