குடுகுடுப்பைக்காரர் போல அமைச்சர் ராஜா பேசுகிறார்: அன்புமணி குற்றச்சாட்டு!

குடுகுடுப்பைக்காரர் போல் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா பேசிக் கொண்டிருக்கிறார் என பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்திற்கு ஃபாக்ஸ்கான் நிறுவனம் உறுதியளித்த ரூ.15,000 கோடி முதலீடு கண்டிப்பாக வரும் என அமைச்சர் ராஜா கூறுகிறார். அம் முதலீடு எப்படி வரும் என்பதை கூற மறுக்கிறார்.  அவர் கூறுவதை பார்க்கும்போது, ‘நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குது’ என குடுகுடுப்பைக்காரர் கூறுவதைப் போல் இருக்கிறது.

அமைச்சரைப் போல தெளிவாக ராஜா பேச வேண்டும். ஜோதிடம் கூறுவதைப்போல பேசிக் கொண்டிருக்கக் கூடாது. ஃபாக்ஸ்கான் முதலீடு தொடர்பாக, தர்க்க ரீதியாக எந்த விளக்கமும் அளிக்க முடியாத ராஜா, ஆதாரமற்ற தகவல்களை கூறக் கூடாது.

தொழில் முதலீடு என்பது, துணி போட்டு மூடிக் கொண்டு, விரல்களைப் பிடித்து விலை பேசும் மாட்டுச் சந்தை பேரம் அல்ல. அதில் மூடி மறைக்க எதுவும் இல்லை.

தமிழகத்திற்கு திமுக அரசு தொழில் முதலீடுகளை கொண்டு வந்தால், அரசியல் வேறுபாடுகளைக் கடந்து வரவேற்பேன். அதே நேரத்தில் வெளிநாடுகளுக்கு, அரசு செலவில் சுற்றுலா சென்று திரும்பிவிட்டு, முதலீடுகள் குவிந்துவிட்டன என கதை, திரைக்கதை எழுதி, வசனம் பேசினால் அதை வேடிக்கைப் பார்க்க முடியாது என அவ்வறிக்கையில் அன்புணி கூறியுள்ளார்.

Comments are closed.