தான் சிறுவயதில் ஆர்எஸ்எஸ் முகாமில் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.
திருவனந்தபுரம் மத்திய ரயில் நிலையம் அருகேயுள்ள ஒரு விடுதியில் கடந்த வியாழக்கிழமையன்று தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் கிடந்தது.
விசாரணையில், அவர் எலிகுளம் கிராம பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட வஞ்சிமலையைச் சேர்ந்த ஐடி ஊழியர் அனந்து அஜி (26) என அடையாளம் காணப்பட்டார்.
அவரது இறுதிச் சடங்குகள் வெள்ளிக்கிழமை மாலை அவரது வீட்டில் செய்யப்பட்டன.
இந்நிலையில், இறப்பதற்கு முன்பு அவர் இன்ஸ்டாகிராமில் எழுதிய பதிவு மாநில அரசியல் வட்டாரங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
அப் பதிவில், “நான் தற்கொலை செய்து கொள்வது பெண்ணாலோ, காதல் விவகாரத்தாலோ, கடன் பிரச்சினையாலோ அல்லது அதுபோன்ற எதனாலோ அல்ல. எனது பதற்றம் மற்றும் மனச் சோர்வு காரணமாக நான் இதைச் செய்கிறேன்.
எனக்கு ஒரு நபர் மற்றும் ஒரு அமைப்பைத் தவிர வேறு யாரிடமும் கோபம் இல்லை. அந்த அமைப்பு ஆர்.எஸ்.எஸ் (ராஷ்ட்ரிய சுயசேவம் சங்கம்). என் தந்தை (மிகவும் நல்ல மனிதர்) என்னை அதில் சேரச் செய்தார். ஆர்.எஸ்.எஸ்-ன் பல உறுப்பினர்களால் நான் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானேன்.
ஆர்.எஸ்.எஸ் முகாம்களில் பாலியல் மற்றும் உடல் ரீதியான துஷ்பிரயோகம் பரவலாக உள்ளது. இதற்கு எந்த ஆதாரமும் இல்லாததால் பலர் இதை நம்பாமல் போகலாம்” என அனந்து எழுதியுள்ளார்.
அனந்துவின் பதிவு வைரலானதைத் தொடர்ந்து, இக் குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என சிபிஐ(எம்) உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இது குறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் வி.கே.சனோஜ் கூறுகையில், “இது ஆர்.எஸ்.எஸ்-ன் மனிதாபிமானமற்ற முகத்தை அம்பலப்படுத்துகிறது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். நமது சமூகத்தில் ஆர்எஸ்எஸ் எவ்வளவு ஆபத்தானது என்பது தெளிவாகிறது. இதுபோன்ற கிளைகளிலிருந்து குழந்தைகளை ஒதுக்கி வைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Comments are closed.