கோவையில் ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர்!

கோவை அவிநாசி சாலையில் ரூ.1,791 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 10.1 கி.மீ நீள நான்கு வழித்தட மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

தமிழகத்தின் மிக நீளமான மேம்பாலமாக கட்டப்பட்டுள்ள இப் பாலத்துக்கு ‘இந்தியாவின் எடிசன்’ என்றழைக்கப்படும் கோவையைச் சேர்ந்த விஞ்ஞானி ஜி டி நாயுடுவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழக அரசின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து கோவை விமான நிலையத்துக்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதலில், கொடிசியாவில் நடைபெற்ற உலக புத்தொழில் மாநாட்டை தொடக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், அதன் பின்னர், உப்பிலிபாளையத்தில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்தில் சிறிது தூரம் நடந்து சென்ற முதல்வர் ஸ்டாலின், பின்னர் தனது வாகனத்தில் பயணித்தார்.

தமிழக நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் கோவை அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.1 கி.மீ நீளம் கொண்ட இந் நான்கு வழித்தட மேம்பாலம் ரூ.1,791 கோடி செலவில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.