சினிமா பாணியில் 40 சவரன் நகை, ரூ.7 லட்சம் கொள்ளை!

ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வர் வீட்டிற்குள் திங்கள்கிழமை அதிகாலை நுழைந்த மர்ம நபர்கள், வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டுவிட்டு 40 சவரன் நகை, ரூ.7 லட்சம் பணம் மற்றும் 3 செல்ஃபோன்களை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை காவவேரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கருணாநிதி (70). இவர் திருச்சி மாவட்டம் முசிறியில் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சாவித்திரி (65), ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியை. இத்தம்பதியினருக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

இந்நிலையில், வீட்டில் கருணாநிதி, சாவித்திரி மற்றும் அவர்களின் இளைய மகள் அபர்ணா ஆகிய மூவர் மட்டும் இருந்துள்ளனர். அதிகாலை 3 மணியளவில் வீட்டிற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத 3 மர்ம நபர்கள் வீட்டில் இருந்த கருணாநிதி உள்ளி;ட்ட மூவரின் கை, கால்களை கட்டிப்போட்டுவிட்டு, வீட்டில் இருந்த 40 சவரன் நகைகள், ரூ.7 லட்சம் பணம், 3 செல்ஃபோன்களை கொள்ளையடித்துவிட்டு காரில் தப்பிச் சென்றுவிட்டனர்.

இதுகுறித்த தகவலின்பேரில், கரூர் மாவட்ட எஸ்.பி. ஜோஸ் தங்கையா, குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இச்சம்பவம் குறித்து குளித்தலை காவல்நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.